செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

லோக்பாலுக்குப்பின்

வெறிச்சோடிக்கிடக்கின்றன
சாலைகள்..

வகுப்பாசிரியர் வராததால்
விளையாட்டு மைதானத்திலேயே
பொழுதைக்கழிக்கும்
குழைந்தைகள்..

காலை உணவு
நேரம் கடந்தும்
பசியோடிருக்கும்
முதியோர் இல்ல
பெற்றோர்கள்..

வெற்றுத்திரைகளாய்
தொலைக்காட்சிகள்…
வெள்ளைக்காதிதமாய்
செய்தித்தாட்கள்…

எதிர்க்கட்சிகளின்
வெளி நடப்பில்லை,
ஆனாலும்
செயல்படவில்லை
பாராளுமன்றம்..

வானமெங்கும்
வட்டமிடுகின்றன
விமானங்கள்,
தரையிறங்க
அனுமதி இல்லாமல்…

முதலாளி – தொழிலளி,
ஏழை - பணக்காரன்,
ஆண் – பெண்
ஏற்றத்தாழ்வுகள் போய்
எல்லோரும் சமம்
இப்போது…
எண் ஒன்றே
அடையாளம்..

விமான நிலையம்
வந்த வெளிநாட்டவர்
முகத்தில்
அறைகிறது
“சிறைச்சாலைக்குள் வெளியாட்கள் அனுமதி இல்லை”
எனும் வாசகம்..

மாலையோடு
அலைந்து, திரிந்து
களைத்துப்போயின
யானைகள்…

எல்லைகள்
தாண்டி
ஓடிக்கொண்டேயிருக்கின்றது
அசுவமேத
புரவி..

வெற்றிக்களிப்போடு
ஊர்வலம் போகிறார்
அன்னா…
தனியாக!!!

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

விதையின் இரகசியம்

ஆயிரங்காலத்து
பயிறொன்றில்
சூல் கொண்டதொரு
பூ…

பத்துத்திங்கள்
பனிவிடையின்
பயனாய் விழுந்ததொரு
பழம்…

பால்யம்
கடந்ததும்
பள்ளியில் விதைத்தான்
விதையை..

விருட்சமாகி
விஞ்ஞானம் பேசுமென்றான்...

பொறிகளாய்
பூக்குமென்றான்...

விதைப்பதும்,
வேலியிட்டு நீருற்றி
வளர்ப்பதுமே
உன் வேலை
தோட்டக்காரனே..

விருட்சத்தின்
இரகசியம்
விதை மட்டுமே
அறியும்
என்பதறி!!!

-பாட்ஷா